சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாட அல்லது பிடிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் மூவர் வெவ்வேறு சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது சம்பவத்தில், கடந்த வியாழக்கிழமை லபுனோருவ பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மொரகொட வனவிலங்கு காவல் அலுவலக அதிகாரிகள் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது, அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றும், வனவிலங்குகளைக் கொல்ல அல்லது பிடிக்கப் பயன்படுத்தப்படும் கேபிள் மற்றும் கம்பி வலைகளும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, வடமேல் வனவலயத்திற்குட்பட்ட கஹல்ல – பள்ளேகல சரணாலயத்தின் நிகினியாவ பகுதியில் விஜிதபுர வனவிலங்கு காவல் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துத் தூள், வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
லபுனோருவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.
இரண்டாவது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










