எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை வெல்வதற்குத் தயார்படுத்தும் நோக்கிலேயே இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நீண்டகாலத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்தத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைத்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், “2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் இல்லை என்பது எமக்கும் தெரியும். அது அனைவருக்கும் தெரிந்த விடயமே” எனத் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளைக் கருத்திற்கொண்டு இளம் விளையாட்டு வீரர்களை முறையாகப் பயிற்றுவித்து, எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதியான வீரர்களாக உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்போது இலங்கை வீரர்கள் சிறந்த முறையில் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்ட நீண்டகால அபிவிருத்தித் திட்டமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தபோது, ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகை வழங்கும் முன்மொழிவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
இதற்கமைய, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 75 மில்லியன் ரூபாயும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 மில்லியன் ரூபாயும், சார்க் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 மில்லியன் ரூபாயும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.










