நாடு முழுவதும் பழங்களைப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் பழுக்க வைக்கும் நடைமுறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், அநுராதபுரத்தில் புதிய பழங்கள் பழுக்க வைக்கும் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவினால் இந்த நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவனம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் உணவுப் பொருட்களின் தரப் பரிசோதனை, தரமான உணவு உற்பத்தி தொடர்பான பயிற்சித் திட்டங்கள், சான்றிதழ் வழங்குதல் மற்றும் ஆய்வுப் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
நாடு முழுவதும் பாதுகாப்பான உணவு நுகர்வை உறுதிப்படுத்தும் நோக்கில், பழங்களை சுகாதாரமான முறையில் பழுக்க வைக்கும் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன்போது, பழங்களைக் கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் உள்ளூர் பழ வியாபாரிகளுக்கு கூடைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திறப்பு விழாவில் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசந்த நவரத்ன மற்றும் சேன நாணயக்கார, தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோஹித பிரசாந்த உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










