மக்காவில் இரு பங்களாதேஷ் பிரஜைகள் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர், தமது அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என பங்களாதேஷ் அரசாங்கம் சவூதி அரேபியாவிடம் கவலை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சின் தகவலின்படி, பள்ளிவாசலுக்குள் “ஒழுக்கக்கேடான செயலில்” ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பங்களாதேஷைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
எனினும், தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே தமக்கு இவ்விடயம் தெரியவந்ததாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சவூதி அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் வழங்காதது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
பங்களாதேஷின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஷாமா ஒபாயித் இஸ்லாம், குறித்த நபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு வழிவகுத்த சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், குற்றஞ்சாட்டப்பட்ட செயல் தொடர்பான துல்லியமான விபரங்களை சவூதி அதிகாரிகள் இதுவரை பகிரங்கமாக வெளியிடவில்லை.
ஊடக அறிக்கைகளின்படி, குறித்த இருவரும் சவூதி அரேபியாவினால் ஜித்தாவிலுள்ள பங்களாதேஷ் துணைத் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பங்களாதேஷ் கைதிகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இருப்பினும், அந்தப் பட்டியலில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் பங்களாதேஷில் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், தண்டனைகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அந்நாட்டு அரசாங்கத்திற்கு ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சவூதி அரேபியாவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பங்களாதேஷ் பிரஜைகள் வசித்து வருவதுடன், அங்கு பணியாற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில், ஒக்டோபர் 18ஆம் திகதி டாக்காவிலுள்ள சவூதி அரேபியத் தூதுவரிடமும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு இந்த விவகாரத்தை நேரடியாக முன்வைத்துள்ளது. சட்ட நடவடிக்கைகள் மற்றும் தூக்குத் தண்டனைகள் தொடர்பில் தமது அதிகாரிகளுக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா, இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் நீதிபதிகளின் விருப்புரிமைக்கு ஏற்ப தண்டனைகளைத் தீர்மானிக்க அனுமதிக்கும் ‘தஃஸீர்’ (Ta’zir) எனப்படும் தண்டனை முறையின் கீழ் இந்த மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அதிகாரிகளின் இராஜதந்திர மற்றும் சட்டரீதியான தலையீடுகளைத் தொடர்ந்து, சமூக ஊடகக் கருத்தொன்றின் காரணமாக இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்த சில நாட்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவிடமிருந்து விரிவான பதிலை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள பங்களாதேஷ் அரசாங்கம், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.










