இங்கிலாந்தில் பொதுப் போக்குவரத்துகளில் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசாங்கம் நாடளாவிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி, பேருந்துகளில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிபரப்பும் பயணிகளுக்கு அதிகபட்சமாக 100 பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படலாம்.
அதிக சத்தத்துடன் ஒலிப்பதிவுகளை இயக்குதல், குப்பைகளை வீசுதல், மின்னணுச் சிகரெட்டுகளைப் பயன்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட செயல்களைக் கட்டுப்படுத்துவதே இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
புதிய வழிகாட்டுதல்களின் கீழ், இங்கிலாந்தில் உள்ள உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு பேருந்துகளில் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது. எனினும், இதற்கு போக்குவரத்துச் செயலாளரின் இறுதி ஒப்புதல் அவசியமாகும்.
பேருந்துகளில் விதிமுறைகளை அமுல்படுத்தும் பணிகளை, பேருந்து சாரதிகளுக்குப் பதிலாக போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.
இதனுடன் இணைந்து, ரயில் பயணிகளுக்காக “பயணப் பெட்டியைப் பகிருங்கள், சத்தத்தை அல்ல” (Share the carriage, not the noise) என்ற தலைப்பில் நாடளாவிய விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
ரயில்களில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிபரப்புதல் மற்றும் பாடுதல் தொடர்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பயணிகளுக்கு நினைவூட்டுவதே இப்பிரசாரத்தின் நோக்கமாகும்.
இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு அதிகபட்சமாக 1,000 பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் ரயிலிலிருந்து வெளியேற்றப்படலாம்.
பொதுப் போக்குவரத்தில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிபரப்புவதற்கு எதிராகப் பயணிகள் மத்தியில் பரவலான அதிருப்தி நிலவுவதாகப் போக்குவரத்துத் துறை ஆர்வலர்களும் கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், புதிய விதிமுறைகளை நடைமுறையில் எவ்வாறு திறம்பட அமுல்படுத்துவது என்பது தொடர்பில் இன்னும் கேள்விகள் எழுந்துள்ளன.










