யானைத் தந்தத்தால் தயாரிக்கப்பட்ட நகைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய சந்தேகநபர் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி திஸ்ஸமஹாராமையில் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடவளவை தேசிய பூங்காவின் பூங்காக் காப்பாளருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வனஜீவராசிகள் அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரின் உடைமையிலிருந்து யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட இரண்டு வளையல்களும் இரண்டு பதக்கங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், கடுமையான பாதுகாப்புக்கு உட்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருத்தல், காட்சிப்படுத்துதல், எடுத்துச் செல்லுதல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஒக்டோபர் 16ஆம் திகதி திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தனிப்பட்ட பிணைகளில் சந்தேகநபரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.










