பொலிஸ் அதிகாரிகளால் பலாங்கொடை கஸ்ஸப தேரர் தாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, உலபனே சுமங்கல தேரரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, இன்று திங்கட்கிழமை உலபனே சுமங்கல தேரர் பணியாற்றும் பாடசாலைக்குச் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவரிடம் சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் (BBS) பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, பலாங்கொடை கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் பரவியதைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பலாங்கொடை கஸ்ஸப தேரர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், குறித்த குற்றச்சாட்டுகள் பரவியதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
போராட்டத்தின்போது பொலிஸ் அதிகாரிகள் எவரேனும் குறித்த தேரரைத் தாக்கினார்களா என்பதைக் கண்டறிவதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










