அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தின் சில சரத்துகளைச் சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு அவர் தனது மனுவின் ஊடாக உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார். முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, சர்ச்சைக்குரிய சரத்துகளைச் சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகாரம் பெறுவது அவசியம் எனத் தீர்ப்பளிக்குமாறு அவர் உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கண்டியிலிருந்து பேரணியாக வந்த உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பிக்குகள், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, குறித்த இடத்தில் பிக்குகள் தங்கியிருப்பதைத் தடைசெய்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.










