மத்திய கிழக்கின் சில பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் திடீரெனப் பாதுகாப்பு நிலைமை மோசமடையக்கூடும் என்பதுடன், விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்படுதல், வான்வெளிகள் மூடப்படுதல் மற்றும் பயணத் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO), ஒக்டோபர் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை மிகவும் கணிக்க முடியாததாக இருப்பதாகவும், திடீர் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மத்திய கிழக்கின் தற்போதைய சூழல் மிகவும் கணிக்க முடியாததாக உள்ளது. திடீரென நிலைமை தீவிரமடையும் அபாயம் அதிகமாகக் காணப்படுகிறது” என அந்தப் பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு மட்டுமன்றி, அப்பிராந்தியத்தின் முக்கிய விமானப் போக்குவரத்து மையங்கள் ஊடாக வேறு நாடுகளுக்குப் பயணிக்கும் பயணிகளுக்கும் பொருந்தும்.
பயணிகள் பிராந்தியத்தின் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விமானச் சேவைகளின் நிலைமையை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், பயணத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பிராந்தியப் பதற்றங்கள் மற்றும் அண்மைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைக்கப்போவதாக முன்னர் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் ஏனைய வசதிகளும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் உட்கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க இராணுவ உட்கட்டமைப்புகள் ஏற்கனவே தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இராணுவ மற்றும் பாதுகாப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தங்களது பயண மற்றும் வெளியேறும் திட்டங்களைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யுமாறும் பிரித்தானியப் பிரஜைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், யேமனில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹூதி இயக்கத்தின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் பணியாற்றும் அத்தியாவசியமற்ற அமெரிக்க அரசாங்கப் பணியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒக்டோபர் 21ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
எனினும், இந்தக் கட்டாய வெளியேற்ற உத்தரவு சவூதி அரேபியாவுக்கு மட்டுமே பொருந்தும் என அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேவேளை, பிராந்தியத்தின் ஏனைய நாடுகளில் உள்ள அமெரிக்க இராஜதந்திரப் பணிகளும் தங்களது பணியாளர் ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்துள்ளன.
மத்திய கிழக்கின் அனைத்து வான்வெளிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், விமான நிலையங்களும் வான்வெளிகளும் குறுகிய முன்னறிவிப்புடன் மூடப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகள் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையில் பயணிக்கும் பயணிகள், வளைகுடா நாடுகளின் முக்கிய விமானப் போக்குவரத்து மையங்களை இணைப்பு விமானங்களுக்காகப் பயன்படுத்துவதால், அவர்களின் பயணங்கள் பாதிக்கப்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.










