செர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாணவர்கள் தலைமையிலான அரசியல் இயக்கம் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், நீண்டகாலமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த அலெக்சாண்டர் வுசிச் மற்றும் அவரது செர்பிய முற்போக்குக் கட்சியின் (SNS) ஆதிக்கத்துக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
ஒக்டோபர் 26ஆம் திகதி செர்பிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட ஆரம்பகட்ட முடிவுகளின்படி, மாணவர் பட்டியல் 52.71 சதவீத வாக்குகளைப் பெற்று, 250 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 140 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
வுசிச் தலைமையிலான கூட்டணி 39.17 சதவீத வாக்குகளைப் பெற்று 104 ஆசனங்களைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தேர்தல் எண்ணிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் 25ஆம் திகதி நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் ஆதரவுடன் போட்டியிட்ட இயக்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்ட வுசிச், தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
அரசாங்க ஊழல் மற்றும் அதிகாரவாதப் போக்குகளுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்த ஏறத்தாழ இரண்டு ஆண்டுகாலப் போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்தத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
2024 நவம்பரில் நோவி சாட் நகரிலுள்ள ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து போராட்டங்கள் ஆரம்பமாகின. இந்தத் துயரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பொறுப்புக்கூறலை வலியுறுத்திய கோரிக்கைகளும் எழுந்தன. பின்னர், அந்தப் போராட்டங்கள் நாடு தழுவிய அரசியல் மாற்றத்துக்கான இயக்கமாக விரிவடைந்தன.
செர்பியாவின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்தனர்.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தலைநகர் பெல்கிரேட் உள்ளிட்ட பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வெற்றியைக் கொண்டாடினர். அவர்கள் கொடிகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் ஆளும் கூட்டணியின் தோல்வியை வரவேற்றனர்.
மாணவர் இயக்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த பெல்கிரேட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரடோமிர் சாஜ்சிச், வெற்றியை அறிவித்ததுடன், நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் இயக்கம் இனி கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்தார்.
போராட்டங்களிலிருந்து உருவான இந்த மாணவர் ஆதரவு தேர்தல் இயக்கம், ஊழலைக் கட்டுப்படுத்துதல், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றைத் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைத்தது.
எனினும், அடுத்த அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கப்போவது யார் என்பது தொடர்பில் இன்னும் தெளிவற்ற நிலை காணப்படுகிறது. இந்த இயக்கம் திட்டமிட்ட வகையில் தனியொரு அரசியல் தலைவரை முன்னிறுத்தாமல் செயற்பட்டு வந்துள்ளது.
இயக்கத்தின் வேட்பாளர் பட்டியலில் கல்வியாளர்கள், மருத்துவத்துறை நிபுணர்கள், நடிகர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர். இது போராட்டங்களின் ஊடாக உருவான பரந்த கூட்டணியைப் பிரதிபலிக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு இந்த இயக்கத்துக்குக் கிடைத்துள்ளது. இருப்பினும், இறுதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதும் புதிய நிர்வாகத்தை அமைப்பதற்கான உத்தியோகபூர்வ நடைமுறைகளும் இன்னும் நிறைவடையவில்லை.
பல்கலைக்கழகங்களில் ஆரம்பமான மாணவர் போராட்ட இயக்கம், தற்போது பால்கன் பிராந்திய நாடான செர்பியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை, அந்நாட்டின் அரசியலில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.










