அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மேற்குப் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல பில்லியன் டொலர் பெறுமதியான புதிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து, முதல் சர்வதேச விமானம் இன்று திங்கட்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்தது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலான திட்டமிடலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள வெஸ்டர்ன் சிட்னி சர்வதேச விமான நிலையம், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் சிட்னியின் பிரதான விமான நிலையத்துக்கு மாற்றுத் தெரிவாக அமைந்துள்ளது.
நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரிலிருந்து வந்த எயார் நியூசிலாந்து விமானம் புதிய விமான நிலையத்தில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. இதன் மூலம் சிட்னியின் பெரும்பாலும் தொழிலாளர் வர்க்க மக்கள் வசிக்கும் மேற்குப் புறநகர்ப் பகுதிகளுக்கான வாரத்தில் மூன்று விமானப் பயணங்களைக் கொண்ட சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதிக்குப் பின்னர் அமைக்கப்பட்டுள்ள முதலாவது புதிய பிரதான விமானப் போக்குவரத்து மையமான இந்த விமான நிலையம், ஒரேயொரு ஓடுபாதையைக் கொண்டுள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சரக்குப் போக்குவரத்துச் சேவைகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டன.
சிட்னியின் பிரதான விமான நிலையமான கிங்ஸ்ஃபோர்ட் ஸ்மித், அவுஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகும். அதன் மூன்று ஓடுபாதைகள் ஊடாக கடந்த ஆண்டு 4.2 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர்.
நகர மையத்திலிருந்து ஒன்பது கிலோமீற்றர் தொலைவில் பொட்டனி விரிகுடாவில் அமைந்துள்ள இந்தப் பிரதான விமான நிலையத்தில், விமானங்களின் இரைச்சல் நகரின் பல குடியிருப்புப் பகுதிகளையும் பாதிக்கிறது. அத்துடன், இரவு நேரங்களில் பயணிகள் விமானங்கள் இயங்குவதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மேற்கு சிட்னியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்தில் இத்தகைய இரவு நேரக் கட்டுப்பாடுகள் இல்லை.
“24 மணி நேரமும் செயல்படுவதன் மூலம், உலகின் முக்கிய விமானப் போக்குவரத்து மையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் விமான நிறுவனங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிப்பதற்குப் பயணிகளுக்கு கூடுதல் தெரிவுகளையும் இந்த விமான நிலையம் வழங்குகிறது” என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி சைமன் ஹிக்கி தெரிவித்துள்ளார்.
குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் குறைந்த கட்டணச் சேவைப் பிரிவான ஜெட்ஸ்டார், தற்போது இந்த விமான நிலையத்தின் பிரதான உள்நாட்டு விமான சேவை நிறுவனமாகச் செயல்படுகிறது. கோல்ட் கோஸ்ட், மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களுக்கான விமானச் சேவைகளை அது முன்னெடுத்து வருகிறது.
மேலும், கட்டார் எயார்வேஸ் 2027 டிசம்பர் மாதத்திலும், பிஜி எயார்வேஸ் 2027 மார்ச் மாதத்திலும், வியட்ஜெட் எயார் 2027 ஜனவரி மாதத்திலும் சர்வதேச விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றியுள்ள போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கான செலவுகளைத் தவிர்த்து, சுமார் 5.3 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (3.7 பில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் இந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது வீதி வழியாக இதனைச் சென்றடைய முடியும் என்றாலும், நேரடி ரயில் இணைப்பு குறைந்தது 2027 டிசம்பர் மாதம் வரை ஏற்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விமான நிலையம் அவுஸ்திரேலியாவுக்கு “ஒரு சிறப்பான புதிய அத்தியாயத்தை” ஆரம்பித்து வைப்பதாகப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
சிட்னியின் புகழ்பெற்ற துறைமுகம் மற்றும் நகர மத்திய வர்த்தகப் பகுதியை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு அப்பால், மேற்கு சிட்னியின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த விமான நிலையம் பங்களிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நீண்ட காலமாக சிட்னி நகரம் துறைமுகத்தையும் நகர மத்திய வர்த்தகப் பகுதியையும் நோக்கியே கவனம் செலுத்தி வந்தது. இந்தப் புதிய விமான நிலையம், மக்கள் வாழும் இடங்கள், வேலைவாய்ப்புகள் உருவாகும் பகுதிகள் மற்றும் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் மேற்கு சிட்னியை நோக்கி அந்தக் கவனத்தைத் திருப்புகிறது” எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.










