தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தேவ் சினிமால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ளார். படத்தின் வெளியீட்டுத் திகதியை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடுத்தர வர்க்க இளைஞன் ஒருவன் கடினமாக உழைத்து வாங்கும் வாகனம் திருடப்படுவதையும், அதனைத் தேடிச் செல்லும் போது பலரும் அந்த வாகனத்திற்கு உரிமை கோருவதையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இதன் பின்னணியில் இயங்கும் வாகனத் திருட்டுக் கும்பலை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் அனாமிகா மஹி கதாநாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், அருள்தாஸ், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 27ஆம் திகதி ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது.









