உலகச் சந்தையில், கடந்த வார இறுதியில் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்த மசகு எண்ணெய் விலைகள் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளன.
சவூதி அரேபியாவில் தொடரும் தாக்குதல்களால் விநியோகம் குறித்த சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இவ்வாறு விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சர்வதேச நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 00.18 மணியளவில், அமெரிக்க மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை ஒரு பீப்பாய்க்கு 1.60 அமெரிக்க டொலர் அல்லது 1.55 சதவீதத்தால் குறைந்து 101.67 டொலராகப் பதிவானது. பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 1.56 டொலர் அல்லது 1.34 சதவீதத்தால் குறைந்து 115.16 டொலராகப் பதிவானது.
சவூதி அரேபியாவில் ஹூதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள் எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சத்தை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் விலைகள் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 3 டொலரால் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது. அந்த வாரத்தில் பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 6 சதவீதமும், அமெரிக்க WTI மசகு எண்ணெயின் விலை 2.3 சதவீதமும் அதிகரித்திருந்தன.
இந்நிலையில், வார இறுதியிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன. சனிக்கிழமை சவூதி அரேபியாவின் விமான நிலையம் மற்றும் எண்ணெய் வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதி அமைப்பினர் தெரிவித்தனர். இதற்கிடையில், மேலும் பல ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக சவூதி அரேபியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
முன்னதாக இடம்பெற்ற ஹூதி தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, தனது பிரதான விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பகுதியளவிலான செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பித்தது. எனினும், அந்த விமான நிலையத்தைத் தொடர்ந்து இலக்கு வைப்பதாக ஹூதி அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.










