பிரேசில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், பிரேசிலில் நான்காவது முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, அந்நாட்டு மக்கள் அவரது தலைமைத்துவத்தின் மீது தொடர்ந்து கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது பிரேசிலின் ஜனநாயக வலிமைக்கான சான்றாகவும் அமைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கையும் செல்வாக்கும் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய நிதி, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களில் உலகின் தெற்கு நாடுகளுக்கு வலுவான குரலை வழங்கும் அமைப்பாக அதனை வடிவமைப்பதில் லூலா டா சில்வாவின் தலைமைத்துவம் முக்கிய பங்காற்றும் என உலகம் எதிர்பார்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் லூலா முன்னெடுத்து வரும் பணிகள், இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளால் பெரிதும் மதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லூலா டா சில்வாவின் வெற்றி உலகின் இந்தப் பிராந்தியத்தில் உள்ள பலருக்கு நிம்மதியளித்துள்ளதாகவும், அவரது தலைமைத்துவத்தின் தாக்கம் பிரேசிலின் எல்லைகளைக் கடந்து உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெறுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.










