ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் பலஸ்தீனர்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் இழைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச விசாரணைக் குழு முடிவுக்கு வந்துள்ளது.
அழித்தொழித்தல், துன்புறுத்தல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அலுவலகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், பலஸ்தீனப் பொதுமக்களை இஸ்ரேலியப் படைகள் திட்டமிட்டுத் இலக்கு வைத்ததாக விசாரணைக் குழு கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஒக்டோபர் 14ஆம் திகதியிடப்பட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் ஐந்தாவது அறிக்கையில் இந்த விடயங்கள் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2023 ஒக்டோபர் முதல் இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீனப் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் கடுமையான உடல், உளவியல் பாதிப்புகள் குறித்து இந்த அறிக்கை ஆராய்கிறது.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் 75,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 21,500 பேர் சிறுவர்கள் என்றும் 11,000 பேர் பெண்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள், பலஸ்தீனப் பொதுமக்களுக்கு எதிரான பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது. இதில் திட்டமிட்ட கொலைகள், அளவுக்கு அதிகமான பலப்பிரயோகம் மற்றும் பாரபட்சமான நடைமுறைகள் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அழித்தொழித்தல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு, பாலியல் வன்முறை மற்றும் தேசியம், இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான துன்புறுத்தல் உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாகவும் குழு தெரிவித்துள்ளது.
காஸா மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனச் சிறுவர்கள் திட்டமிட்டுத் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டுள்ளதாகவும், வயது அடிப்படையிலான துன்புறுத்தல்களை இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காஸா தொடர்பாக, இஸ்ரேலிய அதிகாரிகளும் படைகளும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை இழைத்துள்ளதாக முன்னர் வெளியிட்ட முடிவுகளை விசாரணைக் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அண்மைய அறிக்கையில் ஆராயப்பட்ட சம்பவங்கள், இனப்படுகொலை நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் தொடர்ந்து இடம்பெறுவதை எடுத்துக்காட்டுவதாகவும் குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பலஸ்தீனக் கைதிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான மேலதிக சம்பவங்களையும் விசாரணைக் குழு ஆவணப்படுத்தியுள்ளது. பாலியல் வல்லுறவு, கட்டாயமாக நிர்வாணமாக்குதல் மற்றும் மனித கண்ணியத்தைக் குலைக்கும் ஏனைய நடத்தைகள் இதில் அடங்குகின்றன.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்குக் கரையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 254 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, 2008ஆம் ஆண்டு முதல் 2023 ஒக்டோபர் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வான்வழித் தாக்குதல்களால் ஆறு பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலஸ்தீனப் பிரதேசத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், சர்வதேசச் சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் விசாரணைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த அறிக்கையை நிராகரித்துள்ள இஸ்ரேல், தமது நாட்டைத் தீய நோக்கத்துடன் சித்தரிப்பதை இலக்காகக் கொண்ட தவறான தகவல் பரப்புரையின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.










