பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் வலதுசாரி செனட்டர் ஃபிளாவியோ போல்சொனாரோவைத் தோற்கடித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க நான்காவது முறையாக ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
பிரேசிலின் தேர்தல் அதிகார சபை இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, லூலா செல்லுபடியாகும் வாக்குகளில் சுமார் 51.8 சதவீதத்தைப் பெற்றுள்ளதுடன், ஃபிளாவியோ போல்சொனாரோ 48.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
80 வயதான இடதுசாரித் தலைவரான லூலா, முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோவின் மூத்த மகனான ஃபிளாவியோ போல்சொனாரோவைத் தோற்கடித்துள்ளார். இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஜெய்ர் போல்சொனாரோவை லூலா தோற்கடித்திருந்தார்.
பிரேசிலின் தேர்தல் வரலாற்றில், முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பெற்ற வேட்பாளர் ஒருவர் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. லூலா இதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்ததுடன், 2023 ஜனவரியில் மீண்டும் அப்பதவிக்குத் திரும்பியிருந்தார்.
இந்நிலையில், போக்குவரத்துத் தடைகள் மற்றும் மோசமான காலநிலை காரணமாக வாக்காளர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து முறைப்பாடுகள் எழுந்ததைத் தொடர்ந்து, சில வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கும் நேரத்தை இரண்டு மணித்தியாலங்களால் நீடிக்க பிரேசில் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்தத் தீர்மானம் தேர்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த ஃபிளாவியோ போல்சொனாரோ, தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன், வாக்களிக்கும் நேரத்தை நீடித்த தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தி, தேர்தல் முடிவை இரத்துச் செய்யக் கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லூலா தனது நான்காவது ஜனாதிபதிப் பதவிக் காலத்தை 2027 ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










