அப்பிள் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ‘iPhone Duo’ சாதனத்திற்குப் போலியான விலைக்கழிவுகள் மற்றும் முன்பதிவு சலுகைகளை வழங்குவதாகக் கூறும் மோசடி இணையத்தளங்கள் தொடர்பில் சைபர் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கி (Kaspersky) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான இணையத்தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதிசார் தகவல்களைத் திருடுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
அப்பிள் நிறுவனத்தின் முதலாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் உத்தியோகபூர்வ அறிமுகத்துடன் இணைந்த வகையில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோரை இலக்காகக் கொண்டு பல்வேறு மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தமது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக கெஸ்பர்ஸ்கி குறிப்பிட்டுள்ளது.
கெஸ்பர்ஸ்கியின் தகவலின்படி, அப்பிளின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்த வடிவமைப்பைக் கொண்ட ஆங்கில மொழியிலான போலி இணையத்தளம் ஒன்று, குறித்த சாதனத்திற்கு 25 சதவீத விலைக்கழிவு வழங்கப்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளது.
மேலும், அந்தச் சலுகை இன்னும் 30 நிமிடங்களில் முடிவடையும் எனக் காட்டும் நேரக் கணிப்பொறியும் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் அவசர உணர்வை ஏற்படுத்தி, உடனடியாகக் கொள்வனவு செய்யத் தூண்டுவதே மோசடிக்காரர்களின் நோக்கமாக இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொள்வனவுக்கான இறுதிக் கட்டத்தில், வாடிக்கையாளர்களிடம் அவர்களின் தொடர்பு விபரங்கள் மற்றும் விநியோக முகவரிகள் கோரப்பட்டுள்ளன. பின்னர், பணம் செலுத்துதல் மற்றும் விநியோக ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காகப் பிரதிநிதி ஒருவர் தொடர்புகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடைமுறைகள் ஊடாக மேலதிக தனிப்பட்ட மற்றும் நிதிசார் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இதனால் வாடிக்கையாளர்கள் நிதி இழப்புகளையும் எதிர்கொள்ள நேரிடலாம் என கெஸ்பர்ஸ்கி எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், பல மொழிகளில் இயங்கும் போலி முன்பதிவு இணையத்தளங்களையும் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இந்த இணையத்தளங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த மொழியையும் பணம் செலுத்துவதற்கான நாணயத்தையும் தெரிவுசெய்யும் வசதிகள் வழங்கப்பட்டிருந்தன.
சில இணையத்தளங்கள், கொள்வனவை நிறைவு செய்வதற்காக வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தவறாகக் குறிப்பிட்டிருந்தன.
அதேவேளை, போர்த்துக்கீசிய மொழி பேசும் நுகர்வோரை இலக்காகக் கொண்ட மற்றுமொரு மோசடியில், சாதனத்தின் கிடைப்புத்தன்மையைச் சரிபார்ப்பதாகக் கூறி, வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சல் முகவரிகளும் கோரப்பட்டுள்ளன.
இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் பின்னர் மேலதிக மோசடிகள் மற்றும் உளவியல் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சமூகப் பொறியியல் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என கெஸ்பர்ஸ்கி எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கெஸ்பர்ஸ்கியின் சிரேஷ்ட இணைய உள்ளடக்க ஆய்வாளர் ஓல்கா அல்துகோவா (Olga Altukhova), முக்கியமான புதிய தயாரிப்புகள் அறிமுகமாகும்போது ஏற்படும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
சலுகைகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் விரைவாக முடிவெடுக்குமாறு நுகர்வோருக்கு அழுத்தம் கொடுப்பதே இத்தகைய மோசடிகளின் முக்கிய உத்தி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உத்தியோகபூர்வமற்ற விலைக்கழிவுகள், முன்பதிவு வாய்ப்புகள் மற்றும் தயாரிப்பின் கிடைப்புத்தன்மையைச் சரிபார்ப்பதற்கான கோரிக்கைகள் ஆகியவற்றை மோசடியின் சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகளாகக் கருத வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனால், நுகர்வோர் சாதனங்களைக் கொள்வனவு செய்யும்போது உத்தியோகபூர்வ அல்லது நம்பகமான விற்பனையாளர்களை மாத்திரம் நாடுமாறும், தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு முன்னர் இணையத்தள முகவரிகளை கவனமாகச் சரிபார்க்குமாறும் கெஸ்பர்ஸ்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தனிப்பட்ட மற்றும் நிதிசார் தகவல்களைப் பாதுகாப்பதற்காக நம்பகமான பாதுகாப்பு மென்பொருட்கள், பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை முறைகள், கடவுச்சொல் முகாமையாளர்கள் மற்றும் பல்காரணி அங்கீகார முறை (Multi-factor Authentication) ஆகியவற்றைப் பயன்படுத்துமாறும் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், அனுமதியற்ற பணப்பரிவர்த்தனைகள் இடம்பெறுகின்றனவா என்பதைக் கண்டறிய வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி அறிக்கைகளைத் தவறாமல் கண்காணிக்குமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.










