இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளன.
ஜேர்மனியின் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு, நேற்று (26) கொழும்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பில் ஜேர்மனியின் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 1990ஆம் ஆண்டு ஜேர்மனி மீண்டும் ஒன்றிணைந்ததை நினைவுகூரும் ஜேர்மன் ஒருமைப்பாட்டு தினத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1953ஆம் ஆண்டு ஆரம்பமானதுடன், அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாசாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது.
ஜேர்மனி இலங்கையின் நான்காவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாகத் திகழ்வதுடன், 2025ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கான இலங்கையின் ஏற்றுமதி பெறுமதி 700 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 160க்கும் மேற்பட்ட ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன.
சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரையில், 2025ஆம் ஆண்டில் 147,966 ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ஜேர்மனி, இலங்கையின் நான்காவது பெரிய சுற்றுலாச் சந்தையாக விளங்குகிறது.
கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளில் ஜேர்மனி வழங்கும் ஆதரவையும் அமைச்சர் பாராட்டினார். குறிப்பாக, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் எனப்படும் ‘ஜேர்மன் டெக்’, நாட்டின் தொழில்நுட்பப் பயிற்சித் துறையில் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
‘டிட்வா’ சூறாவளிக்குப் பின்னர் ஜேர்மனி வழங்கிய உதவிகளுக்கு நன்றியையும் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற உறவுகள், கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஜேர்மனியில் வசிக்கும் 120,000க்கும் அதிகமான இலங்கையர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் பங்களித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தவும், புதிய கூட்டாண்மை வாய்ப்புகளை உருவாக்கவும் இலங்கை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.










