மீன்பிடித் தொழிலை வெறும் வாழ்வாதாரப் பொருளாதாரத்துக்கு அப்பால் கொண்டு சென்று ஒரு வணிகத் கைத்தொழிலாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், மீன்பிடித் துறையின் முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் தொடர்பில் முறையான திட்டமிடல்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மீன் உற்பத்தியை அதிகரிப்பதுடன், மீனவ சமூகத்தின் வருமான நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டங்களைத் தயாரிப்பதற்கான அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கான 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கத்துடன், மீன் உற்பத்திகளை நியாயமான மற்றும் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், அது தொடர்பில் மீன்பிடி அமைச்சு சமர்ப்பித்த முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மீன்பிடித் துறையின் தற்போதைய நிலைமை, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள், பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் செயற்பாடுகள், அங்கு எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், அதற்காக தனியார் துறையை இணைத்துக்கொள்வதற்கான திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நிலைபேறான கடற்கரை உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பசுமைத் துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
இலங்கையின் வருடாந்த மீன் உற்பத்தி சுமார் 4 இலட்சம் மெட்ரிக் டன்களாகும் என்றும், அதில் சுமார் 40 சதவீதமானவை அழிவடைவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
அந்த அழிவைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மீன்பிடித் தொழிலின் முன்னேற்றத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிதி உதவித் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி, மீன்பிடி கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
மீன்பிடித் தொழிலானது மற்றைய தொழில்களிலிருந்து வித்தியாசமானது என்பதால், கடன் திட்டங்களைத் தயாரிக்கும்போது அந்தத் துறைக்கென தனியான அளவுகோல்களுடன் தயாரிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
நீர்வாழ் உயிரின வளர்ப்பை மேம்படுத்துதல், அதற்காக புதிய மையங்களை ஸ்தாபித்தல் மற்றும் அத்துறையின் தற்போதைய நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், நன்னீர் மீன்பிடித் துறையுடன் தொடர்புடைய காணிகள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளை மகாவலி அதிகார சபையுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










