சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா பகுதிகளை இலக்குவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் உலக லீக் (MWL) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சவூதி அரேபியாவுக்கு தனது முழுமையான ஆதரவையும் ஒற்றுமையையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
ஒக்டோபர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில்,
இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள முஸ்லிம் உலக லீக், இவை இஸ்லாத்தின் புனிதத் தலங்களின் புனிதத்தன்மையை மீறும் பாரதூரமான செயல்கள் எனத் தெரிவித்துள்ளது.
சவூதி ஊடகமான சவூதி பிரஸ் ஏஜென்சியின் தகவலின்படி, முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் கலாநிதி முஹம்மது பின் அப்துல் கரீம் அல்-ஈஸா இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ளார்.
மேலும், சவூதி அரேபியாவின் பிராந்திய ஒருமைப்பாடு, பொதுமக்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதில் அந்த நாட்டுக்கு அமைப்பு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, மக்கா, ஜித்தா, தாயிப் மற்றும் ராபிக் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏவுகணைகளின் சிதைவுகள் விழுந்துள்ளதாக சவூதி தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் உலக லீக் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
மேற்கு சவூதி அரேபியாவை இலக்குவைத்து ஹூதி தரப்பினரால் ஏவுகணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இத்தாக்குதல்கள் அந்நாட்டின் புனித நகரங்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.










