இலங்கையில் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதுடன், மனித – யானை மோதலைக் குறைக்கும் நோக்கிலும் 229 புதிய வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 223 ஆண்களும் ஆறு பெண்களும் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் III வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வியாழக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன. சுற்றாடல் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சரும் கலந்துகொண்டார்.
போட்டிப் பரீட்சை மற்றும் தொடர் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல், மனித – யானை மோதலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுதல், மின்சார வேலிகளைப் பராமரித்தல், மனித – யானை மோதலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்தல் ஆகியனவும் இவர்களின் முக்கிய பொறுப்புகளாகும்.
மேலும், சட்டவிரோத வேட்டையாடுதல், அனுமதியின்றிப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் பிரவேசித்தல் மற்றும் விலங்குகளைப் பிடிப்பதற்காகப் பொறிகளை அமைத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகச் சோதனை நடவடிக்கைகளையும் இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் இயற்கை ஒதுக்குப் பகுதிகளில் இரவு பகலாக ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதுடன், காயமடைந்த அல்லது பொறிகளில் சிக்கிய வனவிலங்குகளை மீட்டு அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளிலும் உதவவுள்ளனர்.
குறிப்பாக, மனித – யானை மோதலால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் பெண் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு முக்கியமானது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, பெண்கள், சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் பெண் உத்தியோகத்தர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட 229 உத்தியோகத்தர்களுக்கும் ஆறு மாதகால வதிவிடப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
வனவிலங்கு முகாமைத்துவம், சட்ட அமுலாக்கம், நடைமுறை களப்பணித் திறன்கள் மற்றும் தொழில்சார் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய இப்பயிற்சிகள் ரந்தெனிகல, ரிட்டிகல, மதுரு ஓயா மற்றும் கிரிதலே ஆகிய இடங்களில் அமைந்துள்ள வனவிலங்கு பயிற்சி நிலையங்களில் நடத்தப்படவுள்ளன.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் உத்தியோகத்தர்கள் நிரந்தர சேவையில் இணைக்கப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். குறிப்பாக, நாடளாவிய ரீதியில் மனித – யானை மோதலைக் குறைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நியமன நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.










