பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’வின் மனைவியிடம் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணையை இரத்துச் செய்யக் கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் ரகித ராஜபக்ஷ, சரித்த அபேசிங்க மற்றும் வருண ஹண்டிகே அருண சதுரங்க ஆகிய மூவரும், ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது.
ரகித ராஜபக்ஷ, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரக் கட்டாவுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அவரது மனைவியிடம் இருந்து 120 மில்லியன் ரூபா தொகை கோரப்பட்டுப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படுவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.










