பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கட்டா’வுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா இலஞ்ச வழக்கின் முதலாம் சந்தேகநபரான சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வீட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான வருண ஹண்டிகே அருண சதுரங்கவின் மனைவி மற்றும் தந்தைக்குச் சொந்தமான இரண்டு வாகனங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரண்டாவது சந்தேகநபரும் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகனுமான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகள் மற்றும் பல சொகுசு வாகனங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் இந்தச் சொத்து முடக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
தொடர்புடைய அறிக்கைகள் 72 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த ஆணைக்குழு, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிவிப்பதற்கு மற்றுமொரு திகதியை வழங்குமாறும் கோரியுள்ளது.
இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’வுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அவரது மனைவியிடம் இருந்து 120 மில்லியன் ரூபா இலஞ்சமாகக் கோரப்பட்டுப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த விசாரணை தொடர்பில் சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் வருண ஹண்டிகே அருண சதுரங்க ஆகியோர் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.










