சுமார் 14 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
தற்போது 12 இலட்சத்து 6 ஆயிரம் பேருக்கு மாத்திரமே அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 14 இலட்சம் பேருக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று வியாழக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அஸ்வெசும பயனாளர்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கையினால் கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மீளாய்வின் முதற்கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 9 இலட்சத்து 91 ஆயிரம் பயனாளர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்தக் கட்டத்தின் கீழ் தற்போது சுமார் 9 இலட்சத்து 89 ஆயிரம் பேர் கொடுப்பனவுகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி, திருத்தப்பட்ட பட்டியலில் சுமார் 2,000 பயனாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 2 இலட்சத்து 15 ஆயிரம் பயனாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மீளாய்வு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.
மீளாய்வு நிறைவடையும் வரை இரண்டாம் கட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளைப் பெறுவோரின் தற்போதைய எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இன்றி நலன்புரிக் கொடுப்பனவுகள் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், முதற்கட்டத்தின் கீழ் உள்ளடங்கும் சுமார் 7 இலட்சத்து 40 ஆயிரம் பயனாளர்கள் இன்னும் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அஸ்வெசும பயனாளர்களின் மொத்த எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கக்கூடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அஸ்வெசும கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தவறான மற்றும் மக்களைத் திசைதிருப்பும் செய்திகளை நம்ப வேண்டாம் என அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் “சமூக வலுவூட்டலுக்கான புதிய சக்தி” எனும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.










