தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூபா 800 கோடி (சுமார் 96 மில்லியன் அமெரிக்க டொலர்) என்ற மைல்கல்லைக் கடந்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகி 18 நாட்களுக்குள் இத்திரைப்படம் உலகளாவிய ரீதியில் சுமார் இந்திய ரூபா 807.25 கோடியை வசூலித்துள்ளதாகத் திரைப்பட வசூல் கண்காணிப்பு நிறுவனமான Sacnilk தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை ஒன்று பதிவாகியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்திய ரூபா 533.75 கோடியை மொத்த வசூலாகப் பெற்றுள்ள இத்திரைப்படம், வெளிநாட்டுச் சந்தைகளில் மேலும் இந்திய ரூபா 273.50 கோடியை வசூலித்துள்ளது.
இதன் மூலம் 2018ஆம் ஆண்டு வெளியான ‘2.0’ திரைப்படத்தின் வசூல் சாதனையையும் ரஜினிகாந்த் முறியடித்துள்ளார். இதுவரை அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படத்தில் நடித்த நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’, 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இதில் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
மேலும், 2026ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெயிலர் 2’ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









