இலங்கையில் புதிய கட்டாய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருவதால், நாடளாவிய ரீதியில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
அதேவேளை, திணைக்களத்தின் இணையவழிப் பதிவு முறைமையை அணுகுவதிலும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிகளவானோர் ஒரே நேரத்தில் இணையத்தளத்தைப் பயன்படுத்துவதால், இணையத்தளம் செயலிழப்பதாகவும் பதிலளிக்காமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் எட்டு வகையான நிதி, வர்த்தக மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதிய நடைமுறையின்படி, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செல்லுபடியாகும் TIN இலக்கம் அவசியமாகும்.
- வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கணக்குகளைத் திறத்தல்.
- கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல்.
- மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல்.
- மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல்.
- காணிகள் அல்லது காணி உரிமைகளைப் பதிவு செய்தல்.
- வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல்.
- இலங்கை நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்.
- கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல்.
2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் விண்ணப்பதாரர்களின் TIN விபரங்களைச் சரிபார்க்குமாறு தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் TIN இலக்கத்தைப் பதிவு செய்வது கட்டாயம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதால் ஒருவர் தானாகவே வருமான வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக, வருடாந்தம் வரி விதிக்கத்தக்க வருமானம் 18 இலட்சம் ரூபாவைத் தாண்டும் நபர்களுக்கே தனிநபர் வருமான வரி பொருந்தும்.
பொதுமக்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ird.gov.lk ஊடாக TIN இலக்கத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
இணையவழிப் பதிவு முறைமையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தடங்கல்கள், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையுடன் நேரடியாகத் தொடர்புடையதா என்பது குறித்து திணைக்களம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.










