சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள புதிய தமிழ்த் திரைப்படமான ‘தர்மன்’ திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இத்திரைப்படத்தைத் தயாரிக்கும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நஷனல் நிறுவனம், ஒக்டோபர் 26ஆம் திகதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ரஜினிகாந்த் – நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைகிறது. ஏற்கனவே ‘சந்திரமுகி’, ‘குசேலன்’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகிய திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் அறியப்படும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இத்திரைப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மூத்த நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதுடன், நிகேத் பொம்மி ஒளிப்பதிவையும், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.
இத்திரைப்படத்தில் நயன்தாரா ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மற்றும் படத்தின் கதைக்களம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள மற்றுமொரு திரைப்படத்திற்காக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக ‘ஹாய்’ திரைப்படத்தில் நடித்திருந்த நயன்தாரா, தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் தயாராகி வருகின்றார்.









