ஈரான் மீது அணுவாயுதத் தாக்குதலை நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்க அரசியல் விமர்சகர் டக்கர் கார்ல்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் தீர்மானம் ஒன்றை எடுக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய ஈரானில் அமைந்துள்ள ‘Pickax Mountain’ பகுதியில் அணுவாயுதத் தாக்குதலை நடத்துவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் இன்னும் சில நாட்களில் பரிசீலிக்கக்கூடும் என கார்ல்சன் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் தெஹ்ரான் மீண்டும் யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய புலனாய்வுப் பிரிவினர் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய அணுசக்தி நிலையம் சுமார் 300 அடி தடிமனான திடமான கிரானைட் பாறைகளுக்கு அடியில் அமைந்துள்ளதாகவும், இதனால் அமெரிக்காவின் வழக்கமான ஆயுதங்களால் அங்குள்ள நிலத்தடி சுரங்கங்களை அழிக்க முடியாது என்றும் கார்ல்சன் கூறியுள்ளார்.
இதனால், அணுவாயுதத் தாக்குதலை நடத்துமாறு நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இது தொடர்பில் தகவலறிந்த பெயர் குறிப்பிடப்படாத ஒருவர், “பீபி (நெதன்யாகு) இதற்காகத் தினமும் ட்ரம்பைத் தொடர்புகொள்கிறார்” எனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நெதன்யாகு உள்நாட்டு அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகவும், ஆட்சியில் நீடிப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற ஆதரவைப் பெற்றுக்கொள்ள ட்ரம்பின் தலையீட்டை நாடுவதாகவும் கார்ல்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) தளபதி பிராட் கூப்பர் ஆகியோர் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்டுவதற்கு எதிராக இருப்பதாகவும், மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆதரவளிப்பதாகவும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.









