இலங்கை பாரிய அளவிலான சர்வதேச இணைய மோசடிகளின் மையமாக மாறும் அபாயம் காணப்படுவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டில் மாத்திரம் 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இலங்கையிலிருந்து சர்வதேச இணைய மோசடிகளை முன்னெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் சந்தேகநபர்களுக்கு எதிராக இதுவரை வெற்றிகரமான வழக்குத் தொடரல்கள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘X’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சண்டே டைம்ஸ்’ நாளிதழின் விசாரணை அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ள அவர், 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருந்த இணைய மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் 27 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது 1,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையிலிருந்து சர்வதேச இணைய மோசடிகளை முன்னெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் சந்தேகநபர்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு வெற்றிகரமான வழக்குத் தொடரலும் இடம்பெறவில்லை என்பதைப் பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொழில்துறை அளவிலான இணையக் குற்றச் செயல்களின் மையமாக மாறக்கூடும் என சர்வதேச நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைச் சுட்டிக்காட்டிய அவர், குற்றவியல் வலையமைப்புகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, நம்பகமான பிராந்திய நிதி மையமாக இலங்கை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“துறைமுக நகரம் உறுதியளித்த மையம் இதுவல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பிராந்திய நிதி மையம் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இணைய மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள், சர்வதேச வர்த்தகத் துறையில் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை விசா விண்ணப்பதாரர்களைத் தீவிரமாகப் பரிசோதிப்பதுடன், நாட்டின் இணையக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களையும் காலத்திற்கேற்ப மேம்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ஒருமுறை இழக்கப்படும் நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம்” எனவும் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.










