சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய ரீதியில் 11 நாட்களில் 710 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
திரைப்படங்களின் வசூல் விபரங்களைக் கண்காணிக்கும் சாக்னில்க் (Sacnilk) தளத்தின் தகவலின்படி, ஒக்டோபர் 25ஆம் திகதி வரை இப்படம் உலகளாவிய ரீதியில் 710.35 கோடி இந்திய ரூபாயை வசூலித்துள்ளது. இதன் மூலம், ரஜினிகாந்த் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘2.0’ திரைப்படத்தின் மொத்த வசூலான சுமார் 691 கோடி ரூபாயை ‘ஜெயிலர் 2’ முறியடித்துள்ளது.
இதன்மூலம், உலகளாவிய வசூலில் 700 கோடி இந்திய ரூபாய் என்ற மைல்கல்லைக் கடந்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியான இப்படம், இந்தியாவில் 466.85 கோடி ரூபாயையும், வெளிநாட்டுச் சந்தைகளில் 243.50 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது.
அதிரடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
மேலும், 2026ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாகவும் ‘ஜெயிலர் 2’ உருவெடுத்துள்ளது. இந்தியா மற்றும் சர்வதேசத் திரையரங்குகளில் இப்படத்தின் திரையிடல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









