இலங்கையின் கறுவாப்பட்டை தொழில்துறை மூலம் 2026 ஆகஸ்ட் 30ஆம் திகதி வரையில் 185 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 பில்லியன் ரூபா) வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டு இறுதிக்குள் கறுவாப்பட்டை தொழில்துறை மூலம் 100 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்காக விவசாய அமைச்சின் ஊடாக கறுவாப்பட்டை அபிவிருத்தித் திணைக்களத்துக்கு 365 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் பாரம்பரியமாக கறுவாப்பட்டை பயிரிடப்படாத பகுதிகளில் புதிதாக 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் கறுவாப்பட்டை செய்கையை ஆரம்பிப்பதற்கும், பெறுமதி சேர்க்கப்பட்ட கறுவாப்பட்டைபொருட்களை உற்பத்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், கறுவாப்பட்டை தொழில்துறைக்குச் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கும், இத்துறையில் தொழில்முனைவோரை உருவாக்கி மேம்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கறுவாப்பட்டை தொழில்துறையை மேலும் அபிவிருத்தி செய்து, 2026ஆம் ஆண்டுக்கான வருமான இலக்கை அடைவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.










