அரசாங்கத்தின் திறைசேரியில் பெருமளவு பணம் காணப்பட்டாலும், சாதாரண மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற கொழும்பு மோட்டார் கண்காட்சியைப் பார்வையிடச் சென்றபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மக்களிடம் கொள்வனவு சக்தி இல்லாத நிலையில், அரசாங்கத்தின் நிதி அறிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிட முடியாது எனக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இம்முறை மோட்டார் கண்காட்சிக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாகவும், இது நுகர்வோர் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளைப் பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களிடம் செலவிடுவதற்குப் போதிய பணம் இல்லாதபோது வர்த்தக நிறுவனங்களும் தொழில்முனைவோரும் முன்னேற முடியாது எனத் தெரிவித்த அவர், மக்களின் கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைவது பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கும் என எச்சரித்தார்.
இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாகுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய சஜித் பிரேமதாச, அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதற்குப் பதிலாக அவர்கள் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான மூலதன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.
2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளால் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், இனியும் அவர்கள் அவ்வாறு ஏமாறத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வாகனக் கைத்தொழில் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வாகனமொன்றைச் சொந்தமாக்கிக் கொள்வது இன்னமும் பல இலங்கையர்களுக்கு கனவாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
வாகனங்களை விற்பனை செய்வதிலும் இறக்குமதி செய்வதிலும் மாத்திரம் கவனம் செலுத்தாமல், உள்நாட்டிலேயே வாகன உற்பத்திக் கைத்தொழிலை உருவாக்குவதற்கு இலங்கை முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்காக முதலீட்டுக்கு உகந்த சூழலை நாட்டில் உருவாக்குவதன் மூலம், வாகன உற்பத்தி நிறுவனங்களை இலங்கைக்கு ஈர்த்து, இத்துறையில் நாட்டின் ஆற்றலை மேம்படுத்த முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.









