முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 26 மாதகால பதவிக் காலத்தில் 33 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1,010 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதே காலப்பகுதியில் மேற்கொண்ட 8 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 31.7 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்ட அமைச்சர், ரணில் விக்ரமசிங்க 2022 செப்டெம்பர் 17ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட பயணம் முதல் 2024 ஜூன் 8ஆம் திகதி இந்தியாவுக்கான பயணம் வரையான காலப்பகுதியில் 33 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த 33 பயணங்களின்போதும் அவருடன் மொத்தம் 421 பேர் பயணித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு மாறாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பதவிக் காலத்தின் முதல் 26 மாதங்களில் 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றுக்காக மொத்தம் 31.7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், குறித்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலதிக கொடுப்பனவுகளையோ அல்லது ஒன்றிணைக்கப்பட்ட கொடுப்பனவுகளையோ கோரிப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.









