வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீலநிறம் பூசி, அவற்றை லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைப் போன்று மாற்றியதாகக் கூறப்படும் மோசடி நடவடிக்கை தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைகளின்படி, புதிதாக வர்ணம் பூசப்பட்ட சிலிண்டர்கள் பழையனவாகவும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவையாகவும் தோற்றமளிக்கும் வகையில் சந்தேகநபர்கள் தந்திரமான முறையைக் கையாண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதற்காக, சிலிண்டர்களின் மீது உணவுக் கழிவுகள் மற்றும் உணவுத் துகள்கள் பூசப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆப்ப மாவின் எஞ்சிய பகுதிகள் மற்றும் மிளகாய்க் குழம்பு போன்றவற்றைப் பூசி, அவை சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர்கள் போன்று காட்சியளிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









