முல்லைத்தீவில் 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கோவில் பூசகர் ஒருவரின் சிறைத்தண்டனையை 17 ஆண்டுகளில் இருந்து 13 ஆண்டுகளாக மேன்முறையீட்டு நீதிமன்றம் குறைத்துள்ளது.
குறித்த நபர், 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்றப் பதிவுகளின்படி, இடம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த நிலையில், சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது, குறித்த பூசகர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், சம்பவம் தொடர்பில் வெளியில் தெரிவித்தால் அச்சுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் இடம்பெயர்ந்தோர் முகாமுக்குத் திரும்பியுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள் சிறுமி கர்ப்பமடைந்துள்ளமையைக் கண்டறிந்ததைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில், பிறந்த குழந்தையின் தந்தை குறித்த பூசகர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் உறவு இருவரின் சம்மதத்துடன் இடம்பெற்றதாக குற்றவாளி முன்வைத்த வாதத்தை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு எதிரான குற்றத்தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
எனினும், அவர் இதற்கு முன்னர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்காதவர் என்பதையும், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதையும் கருத்திற்கொண்டு, 17 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கடூழிய சிறைத்தண்டனையை 13 ஆண்டுகளாகக் குறைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
அதேவேளை, ஏற்கனவே விதிக்கப்பட்ட 5,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிடப்பட்ட 300,000 ரூபா நட்டஈடும் மாற்றமின்றித் தொடரும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.









