வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அசர்பைஜானில் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துள்ளார். ஆசியாவில் பரஸ்பர தொடர்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் (CICA) ஏழாவது உச்சிமாநாட்டில் இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்குவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அசர்பைஜானின் தலைமையில் ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில், CICA அமைப்பின் 28 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பிராந்திய இணைப்புகளை வலுப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வலுவான தொடர்புகள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மூலம் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில் வலியுறுத்தினார்.
இந்த உச்சிமாநாட்டின் நிறைவில், பாக்கு பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், லாவோஸ் முழுமையான உறுப்பு நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது. மேலும், 2026–2028 காலப்பகுதிக்காக அசர்பைஜானின் தலைமைப் பொறுப்பு நீடிக்கப்பட்டதுடன், CICA அமைப்பின் பொதுச் செயலாளராக சுல்தான் ஹாஜியேவ் நியமிக்கப்பட்டார்.
இந்த விஜயத்தின்போது, அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை ஸுகுல்பா மாளிகையில் சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத், அசர்பைஜான், பஹ்ரைன், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும், CICA பொதுச் செயலாளர் கைரத் சாரிபாயுடனும் இருதரப்புக் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். வர்த்தகம், சுற்றுலா, விவசாயம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயும் நோக்கில், அசர்பைஜானின் எரிசக்தி நிறுவனமான SOCAR உடனான உயர்மட்ட வர்த்தகக் கலந்துரையாடலிலும் அமைச்சர் பங்கேற்றார். ஈரானுக்கான இலங்கைத் தூதுவரும் அசர்பைஜானுக்கான தூதரக அங்கீகாரத்தைக் கொண்டவருமான பேராசிரியர் பஸீஹா அஸ்மி மற்றும் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமரி ரொட்ரிகோ ஆகியோரும் அமைச்சருடன் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.
CICA உறுப்பு நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிராந்திய பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்குமான இலங்கையின் அர்ப்பணிப்பை இந்த விஜயம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.










