நுகர்வோருக்கு தடையற்ற சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் திரவப் பெற்றோலிய வாயு (LPG) விநியோகத்தைத் துரிதப்படுத்தி வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த FRANCOIS கப்பல் ஒக்டோபர் 18ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும், தற்போது அதிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மேலும் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவரும் CORINTHIAN என்ற நான்காவது கப்பல் ஒக்டோபர் 22ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயுக் கப்பல்களின் வருகை, நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தைச் சீராக்குவதற்கும், சந்தையில் தட்டுப்பாடின்றி வழக்கமான விநியோகத்தைப் பேணுவதற்கும் உதவும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் திரவப் பெற்றோலிய வாயு தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நுகர்வோர் எரிவாயு விநியோகம் தொடர்பில் கவலைகொள்ளத் தேவையில்லை எனவும் லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.










