2030ஆம் ஆண்டுக்குள் வருடாந்தம் 50 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான மூலோபாயத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, சுற்றுலாப் பொலிஸாரின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், வழமையான பொலிஸ் சேவையிலிருந்து வேறுபட்ட சிறப்புக் கட்டமைப்பாக சுற்றுலாப் பொலிஸ் பிரிவை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்கு மேலதிக அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும், அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், இன, மத மற்றும் தீவிரவாத மோதல்கள் அற்ற அமைதியான சூழலும் அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டு வருகின்ற போதிலும், நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மேலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், நாட்டின் இயற்கை அழகு, கலாசார மரபுரிமைகள் மற்றும் விருந்தோம்பல் பண்புகளையும் பாதுகாப்பது அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். “எமது நாட்டின் இயற்கை அழகையும் மரபுரிமைகளையும் பாதுகாக்கத் தவறினால், எதிர்காலத் தலைமுறையினர் அவற்றைச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களின் ஊடாக மட்டுமே பார்க்கக்கூடிய நிலை ஏற்படலாம்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.










