இலங்கையின் புகழ்பெற்ற தந்தங்களைக் கொண்ட காட்டு யானையான காவந்திஸ்ஸவைச் சுட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் குடும்பத்தினர், தங்களது உறவினர்களுக்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்பில்லை எனத் தெரிவித்து, விசாரணையாளர்கள் நிரபராதிகளைத் தவறாகக் குற்றஞ்சாட்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சந்தேகநபர் ஒருவரின் மனைவி, மாலை சுமார் 4.30 மணியளவில் 15 அதிகாரிகள் தமது வீட்டுக்கு வந்து, யானையைச் சுட்டதை ஒப்புக்கொள்ளுமாறு தனது கணவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். “தான் செய்யாத ஒரு குற்றத்தை ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது என எனது கணவர் அவர்களிடம் தெரிவித்தார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தானும் தனது கணவரும் அரசாங்க ஊழியர்கள் எனவும், இரண்டு பிள்ளைகளைக் கொண்ட தமது குடும்பம் இந்தக் குற்றச்சாட்டுகளால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தனது கணவர் குற்றவாளியாகச் சித்தரிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், நான்கு பேர் கொண்ட தமது குடும்பத்தினரால் தற்போது சமூகத்தை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது கணவர் இவ்வாறான குற்றமொன்றை ஒருபோதும் செய்ததில்லை என வலியுறுத்திய அவர், யானைகளிடமிருந்து தமது சொத்துகளைப் பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைக்கக் கணிசமான தொகையைச் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணையாளர்களால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சட்டப்பூர்வமாக அனுமதிப்பத்திரம் பெற்று பதிவு செய்யப்பட்டதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மற்றொரு சந்தேகநபரின் உறவினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வலான பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தமது சகோதரர்கள் உள்ளிட்ட பலரை இந்தச் சம்பவத்துடன் தொடர்பில்லாத நிலையிலும் கைது செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகவும், காதில் ஏற்பட்ட காயம் காரணமாக பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நிரபராதிகள் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவந்திஸ்ஸ யானையைச் சுட்ட உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், நிரபராதிகள் பாதிக்கப்படக் கூடாது எனவும் சந்தேகநபர்களின் குடும்பத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஹவ நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது, சந்தேகநபர்களுக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்கும் போதிய சாட்சியங்களை விசாரணையாளர்கள் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது, சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் குறித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய நீதவான் அனுராதா சிறிவர்தன, மேலதிக சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு விசாரணையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, இரண்டு சந்தேகநபர்களும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பிரதான சந்தேகநபருக்கும் யானை சுடப்பட்ட சம்பவத்துக்கும் இடையிலான தொடர்பை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
விசாரணைகளின்போது துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இலங்கையின் புகழ்பெற்ற காட்டு யானைகளில் ஒன்றான காவந்திஸ்ஸ, தனது வலது முன்னங்காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒக்டோபர் 16ஆம் திகதி உயிரிழந்தது.










