தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் கப்பல் போக்குவரத்து தாமதங்கள் காரணமாக இலங்கைக்கு சுமார் 18.3 பில்லியன் ரூபா இழப்பும் மேலதிக செலவுகளும் ஏற்பட்டுள்ளதாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் எஸ்.எம். மரிக்கார் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கொள்வனவு நடைமுறைகள், அதன் தரத்தில் காணப்பட்ட முரண்பாடுகள் மற்றும் மின்சார உற்பத்தியில் அவை ஏற்படுத்திய நிதி தாக்கங்கள் குறித்து இந்த விசாரணையில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி, தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியதால் 7.099 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்பார்க்கப்பட்ட 300 மெகாவாட் மின்சார உற்பத்தியை எட்ட முடியாத காரணத்தால் மேலதிக மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய 8.572 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலக்கரி கப்பல்களின் வருகையில் ஏற்பட்ட தாமதங்களால் மேலதிக பராமரிப்புச் செலவுகள், சாம்பலைப் போக்குவரத்து செய்வதற்கான செலவுகள் மற்றும் அவசரமாக நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கான செலவுகள் உள்ளிட்டவையும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மதிப்பிடப்பட்ட 18.3 பில்லியன் ரூபா நிதித் தாக்கத்தில், உலக சந்தையில் அதிகரித்த எரிசக்தி விலைகளால் ஏற்பட்ட செலவுகளும், உள்நாட்டில் அரசாங்கம் வழங்கிய மானியங்களும் உள்ளடக்கப்படவில்லை என மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இந்தச் செலவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு நிபுணர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










