கொழும்பில் நேபாள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியொன்று, அரசாங்கத்தின் அனுமதியின்றி தனியார் நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்தக் காணியை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை நேபாள அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
நேபாள ஊடகமான Onlinekhabar வெளியிட்டுள்ள செய்தியின்படி, இலங்கையில் தூதரகமொன்றை நிறுவும் நோக்கில், 1989ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி கொழும்பு, ராஜகிரிய பகுதியில் 1.5 ஏக்கர் காணியை நேபாளம் 360,000 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது.
அந்தக் காணியில் ஒரு ஏக்கர், இலங்கைக்கான நேபாளத்தின் முன்னாள் தூதுவர் ஜெனரலான அல்பர்ட் எதிரிசிங்கவினால் 1990 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது உயிரிழந்துள்ள அவருக்கு, குறித்த காணியை விற்பனை செய்வதற்கான அரசாங்க அனுமதி வழங்கப்பட்டமைக்கான எந்தவொரு ஆவணமும் தம்மிடம் இல்லை என நேபாள வெளிவிவகார அமைச்சு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த காணி 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 100,000 அமெரிக்க டொலர்களுக்கு முதலில் விற்பனை செய்யப்பட்டதுடன், பின்னர் 1994ஆம் ஆண்டு மே மாதம் மற்றொரு நபருக்கு 120,000 அமெரிக்க டொலர்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நடவடிக்கைகள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த காணியைச் சுத்தப்படுத்தி வேலியிடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, 2025ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதியே இந்த விவகாரம் நேபாள அதிகாரிகளின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணியின் தற்போதைய பெறுமதி சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் நிஷ்கல் ராய் மதிப்பிட்டுள்ளார்.
காணியின் உரிமையை உறுதிப்படுத்தி, அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அதிகாரிகள் நேபாள இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காணியை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுடன் நேபாளம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன், அனுமதியற்ற காணி மாற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
குறிப்பு: இந்தத் தகவல் நேபாளத்தின் Onlinekhabar ஊடகச் செய்தியை அடிப்படையாகக் கொண்டது. தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
अवैतनिक महावाणिज्यदूतले बेचिदिए श्रीलंकास्थित दूतावासको जग्गा, ३२ वर्षपछि पुनर्प्राप्तिको पहल










