“நான் வேற்று கிரகவாசி” : தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்

‘நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்’ என தெரிவித்து தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு ஒரு நபர் மக்கள் நடமாட்டமுள்ள தெருவில் நிர்வாணமாக நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அம்மாகாணத்தின் வெஸ்ட் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரான ஜேசன் ஸ்மித். இவர் கடந்த மார்ச் 8ஆம் திகதி அன்று வொர்த் அவென்யூ என்ற பகுதியில் ஆடைகளில் ஏதுமின்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

நிர்வாணமாக நடந்து சென்ற நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

உடனே, அங்கு விரைந்த பொலிஸார் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் அந்த நபர் தனது பெயர், பிறந்த திகதி விவரங்களை தெரிவிக்கவில்லை.

தனக்கு ஏதும் அடையாளங்கள் ஏதும் இல்லை நான் வேற்று கிரகத்தை சேர்ந்தவன் என்று கூறியுள்ளார். பதிலைக் கேட்டு திகைத்து போன பொலிஸார் பின்னர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள, அவரின் பெயரும் வசிப்பிட விவரமும் தெரியவந்துள்ளது.

அவரிடம் உரிய அடையாள அட்டைகள் ஏதும் இல்லை. தனது உடைகள் எங்கே போனது எனத் தெரியவில்லை என்று அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பொலிஸார் , அவரை கைது செய்த 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.