சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் மருத்துவப் பொருள் விநியோகப் பிரிவின் (MSD) களஞ்சிய முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 130 மில்லியன் ரூபாய் பெறுமதியான 15 நவீன சரக்குக் கையாளும் இயந்திரங்கள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 11 நவீன ரீச் ட்ரக் (Reach Truck) இயந்திரங்களும் நான்கு ஃபோர்க்லிஃப்ட் (Forklift) இயந்திரங்களும் மருத்துவப் பொருள் விநியோகப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர், நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட இவ்வாறான 15 சரக்குக் கையாளும் வாகனங்கள் ஒரே தடவையில் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், குறைந்த எண்ணிக்கையிலான பழைய ஃபோர்க்லிஃப்ட் இயந்திரங்கள் மற்றும் வாடகை வாகனங்களைச் சார்ந்தே இப்பிரிவு தனது பணிகளை முன்னெடுத்து வந்தது.
உலக வங்கியின் திட்ட நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட இந்த இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இதற்கிடையில், உலக வங்கித் திட்டத்தின் கடன் உதவியின் கீழ், காலி, கொழும்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மூன்று புதிய மருந்துக் களஞ்சியத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இந்தக் களஞ்சியத் தொகுதிகள் அமைக்கப்படுவதன் மூலம், நாடளாவிய ரீதியில் மருந்துகளைச் சேமிக்கும் கொள்ளளவை மேலும் 20,000 முதல் 30,000 கன மீற்றர் வரை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான நிர்மாணப் பணிகள் 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த விரிவான நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம், நாடளாவிய ரீதியில் அரச மருந்து விநியோகம் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தை மேலும் சீரமைக்க முடியும் என சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.










