முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் மகனுமான கனிஷ்க சேனாநாயக்க தனது 41ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவு தொடர்பான தகவலை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
“எமது பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஆனால் எமது இதயங்களிலிருந்து ஒருபோதும் மறையமாட்டார். சகோதரரே, அமைதியாக இளைப்பாறுங்கள்” என ஹரின் பெர்னாண்டோ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கனிஷ்க சேனாநாயக்க 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
இளம் வயதிலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளுடனும் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன், பெருநிறுவனத் துறையிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்த அவர், பல நிறுவனங்களின் பணிப்பாளர் பதவிகளையும் வகித்துள்ளார்.
ரோசி சேனாநாயக்க மற்றும் மறைந்த அதுல சேனாநாயக்க தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் கனிஷ்க சேனாநாயக்க மூத்தவராவார்.










