-யாழ் நிருபர்-
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேகநபர், நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.
அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நுவரெலியா பொலிஸாரிடம் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
அவரை, கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து கண்டி பல்லேகல சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடி பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்தநிலையிலேயே, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றுக்கு அருகில் நின்றிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.










