ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதுடன், சில விமானங்கள் விமானப்படை பிரிவுகளின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.
அயர்லாந்து விமானம் நார்மண்டிக்கு திருப்பிவிடப்பட்டது
டப்ளினில் இருந்து ரோம் நோக்கிப் பயணித்த ஏர் லிங்கஸ் விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸின் நார்மண்டி பகுதிக்கு திருப்பிவிடப்பட்டதாக பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, விமானம் எவ்ரூ இராணுவ விமானத் தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
விமானத்தில் இருந்த 151 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
இராணுவ வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
விமானப் பயண கண்காணிப்பு இணையதளங்களின்படி, விமானம் பாரிஸை அண்மித்தபோது தனது பயணப் பாதையிலிருந்து திடீரென விலகி பல சுற்றுகளை மேற்கொண்ட பின்னர் எவ்ரூ நோக்கிப் பயணித்துள்ளது.
ஏர் லிங்கஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
டப்ளினில் இருந்து ரோம் நோக்கிப் பயணித்த EI402 விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நார்மண்டிக்கு திருப்பிவிடப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதுடன், பயணிகளை அவர்களின் இறுதி இலக்கிற்கு விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளது.
பல்கேரியாவில் மூன்று விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்
இதற்கிடையில், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் காரணமாக மூன்று விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பல்கேரியா தெரிவித்துள்ளது.
பல்கேரிய உள்துறை அமைச்சரை மேற்கோள் காட்டி bTV தொலைக்காட்சி வெளியிட்ட தகவலின்படி, கோபன்ஹேகன் மற்றும் மட்ரிட் நகரங்களில் இருந்து வந்த இரண்டு விமானங்கள் சோபியாவில் தரையிறங்கியுள்ளன.
லண்டனில் இருந்து வந்த மூன்றாவது விமானம் ப்ளோவ்டிவ் நகரில் தரையிறங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாலி விமானப்படையின் பாதுகாப்புடன் ஃபின்னேர் விமானம்
ஹெல்சிங்கியில் இருந்து ரோம் நோக்கிப் பயணித்த ஃபின்னேர் விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலிய விமானப்படை பிரிவுகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக ரோம் நகருக்கு அழைத்துச் சென்றதாக இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA தெரிவித்துள்ளது.
போலந்து விமானத்திற்கு பாதுகாப்பு எச்சரிக்கை
வார்சாவில் இருந்து பிரஸ்ஸல்ஸ் நோக்கிப் பயணித்த LOT விமானம், பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து தனது இலக்கில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசில் நான்கு விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
பிராக் நகரை நோக்கிப் பயணித்த நான்கு விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக செக் குடியரசு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானங்கள் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் பிராக் விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சுறுத்தல்களின் நம்பகத்தன்மை குறைவாக மதிப்பிடப்பட்ட போதிலும், அவற்றை அலட்சியப்படுத்தவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக பயணிகளுக்கும் விமான நிலைய நடவடிக்கைகளுக்கும் குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கிய பின்னர் அனைத்து விமானங்களும் வெடிபொருள் தொடர்பான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் தொடரும் விமான வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்
இந்தச் சம்பவங்களுக்கு சில நாட்களுக்கு முன்னர், பிரித்தானியாவிலிருந்து வந்த இரண்டு விமானங்கள் உட்பட குறைந்தது ஏழு விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
இதனால் திட்டமிடப்படாத தரையிறக்கங்களும் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
அந்த நேரத்தில், இவ்வாறான தீங்கிழைக்கும் போலியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பிரித்தானியா நன்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
எனினும், ஐரோப்பாவை மையமாகக் கொண்ட இந்த அச்சுறுத்தல்களில் ரஷ்யாவின் தொடர்பு இருக்கக்கூடும் என விமானப் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான Osprey Flight Solutions இன் Matthew Borie தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஈரானின் கலப்புப் போர் நடவடிக்கைகளும் தீவிரமாக இடம்பெற்று வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










