ஜோர்தானின் அம்மான் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோர்தானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.20 மணியளவில் தூதரகக் கட்டடத்திற்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியான கோப்ரல் ஜவாத் அலி கலாஃப் அல்-சலைத்தா, தனது உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த ஜோர்தானிய பொலிஸார் சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாக அந்நாட்டு பொது பாதுகாப்பு இயக்குநரகம் (PSD) தெரிவித்துள்ளது.
இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் ரோந்துப் பிரிவின் கட்டளை அதிகாரி காயமடைந்துள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாதுகாப்புப் பணியாளர்களை இலக்காகக் கொண்டு சந்தேகநபர் தாக்குதலைத் திட்டமிட்டிருந்ததாக ஜோர்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் அதிகாரபூர்வமாக பயங்கரவாதத் தாக்குதலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த அதிகாரியின் ஆயுதத்தைப் பறிக்க தாக்குதல்தாரி முயற்சித்ததாகவும், மற்றொரு அதிகாரி தலையிட்டு அதனைத் தடுத்ததாகவும் ஜோர்தானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது என அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது.
இலங்கை தூதரகம் உறுதிப்படுத்திய பாதுகாப்பு நிலை
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகப் பணியாளர்கள் மற்றும் இலங்கை சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அம்மானிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினருக்கும் சக பணியாளர்களுக்கும் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் விஷ்வநாத் அப்பொன்சு மற்றும் தூதரக அதிகாரிகள், ஜோர்தானிய அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










