இலங்கையின் யானைகள் மற்றும் தந்தங்களைக் கொண்ட யானைகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டத்தில் Gen Z எனப்படும் இளம் தலைமுறையினர், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற மன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கு இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரினதும் கூட்டுப் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
யானைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர், சுற்றாடல் அமைச்சு மற்றும் ‘Wild Tusker’ குழுவினர் இணைந்து செயற்படுவதை வரவேற்ற அவர், இதனைச் சாதகமான முன்னேற்றமாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனித்துவமான யானைகள் மற்றும் தந்தங்களைக் கொண்ட யானைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குப் பெயரிட்டு, அவற்றின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதன் மூலம் பல வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் யானைகள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யானைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் இத்தகைய நபர்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, 17 தந்தங்களைக் கொண்ட யானைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாச, பாதுகாப்பு தேவைப்படும் மேலும் பல யானைகள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, பாதுகாப்பு தேவைப்படும் அனைத்து யானைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், யானைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்குமாறு அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், வனவிலங்கு கால்நடை மருத்துவர்களுக்கான பற்றாக்குறை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் 33 வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 17 பேர் மாத்திரமே பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், நிலவும் வெற்றிடங்களை நிரப்பி வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், யானைகள் கணக்கெடுப்புகளை முன்னெடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் யானைகள் கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, செல்வாக்கு மிக்க சில நபர்கள் யானைகளைப் பிடித்து வளர்ப்பு யானைகளாக மாற்றிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, கடந்த காலங்களில் மின்னேரியா தேசிய பூங்காவிலிருந்து பல யானைக் குட்டிகள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் யானைகள் கணக்கெடுப்புகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பரந்த சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அனர்த்தங்களைத் தடுப்பது, சுற்றுச்சூழல் கொள்கைகளை வலுப்படுத்துவது மற்றும் அவற்றின் நடைமுறைப்படுத்தலை மதிப்பீடு செய்வது ஆகியவற்றுக்கு காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற மன்றம் முன்னுரிமை அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வனவிலங்குகள், காடுகள், நிலம் மற்றும் நீர்சார் சுற்றுச்சூழல் கட்டமைப்புகள், கடல் சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் விஞ்ஞான நிபுணர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம ஆகியோர் இணைத் தலைமை வகிக்கும் குறித்த நாடாளுமன்ற மன்றத்தில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்தும், தேசிய கொள்கைத் தீர்மானங்களில் விஞ்ஞான நிபுணத்துவத்தை உள்வாங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.










