அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையை ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயீத் படைத்துள்ளார்.
மிச்சிகன் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சியின் முன்னாள் பிரதிநிதி மைக் ரோஜர்ஸைத் தோற்கடித்து அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களின் தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பொதுச் சுகாதார அதிகாரியான எல்-சயீத், ஓய்வுபெறும் செனட் உறுப்பினர் கேரி பீட்டர்ஸின் இடத்திற்காக ஜனநாயகக் கட்சிக்குள் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று, பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
அவரது தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமிய மதப் பின்னணி முக்கிய விவாதப் பொருளாக மாறியிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட குடியரசுக் கட்சியினர் அவரது மதப் பின்னணியை முன்வைத்து தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
எனினும், தீவிரவாதத்துடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எல்-சயீத் நிராகரித்திருந்தார்.
மேலும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மிச்சிகன் மாநிலத்திலேயே எல்-சயீத் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய காங்கிரஸ் சபை கூடும்போது, அமெரிக்க செனட் சபையில் பணியாற்றும் முதல் முஸ்லிம் உறுப்பினர் என்ற வரலாற்றுப் பெருமையை அப்துல் எல்-சயீத் பெறவுள்ளார். (Anadolu Agency)










