பிரான்ஸில் இரத்த வங்கிகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலின்போது, குளிரூட்டும் சாதனங்களின் வெப்பநிலையை 110 பாகை செல்சியஸாக மாற்ற ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இரத்த மாற்றுச் சிகிச்சைகளுக்கும் மருந்து உற்பத்திக்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்மாவைச் சேமித்து வைக்கும் பிரான்ஸ் இரத்த நிறுவனத்தின் (EFS) மூன்று சேமிப்பு நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
பிரான்ஸ் ஊடகங்களின் தகவலின்படி, உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றின் ஊடாக குளிரூட்டும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள், சுமார் மைனஸ் 30 பாகை செல்சியஸில் பராமரிக்கப்பட்டு வந்த வெப்பநிலையை 110 பாகை செல்சியஸாக மாற்ற முயற்சித்துள்ளனர்.
எனினும், கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் இந்த அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்துள்ளன. இதனால், இரத்தப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் அவற்றைப் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பணியாளர்களால் முடிந்துள்ளது.
நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தினால் எந்தவொரு இரத்தப் பொருளும் இழக்கப்படவில்லை என்பதுடன், இரத்தச் சேகரிப்பு மற்றும் விநியோகச் சேவைகளிலும் எவ்வித தடையும் ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
அத்தாக்குதல்களின்போது தொலைவிலிருந்து குளிரூட்டும் வெப்பநிலையை மாற்றியதால் பெருமளவிலான உணவுப் பொருட்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸில் இடம்பெற்றுள்ள சமீபத்திய சைபர் தாக்குதல் தொடர்பில் அந்நாட்டின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்களுக்கும் முன்னர் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பு உள்ளதா அல்லது இதற்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.










